ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வெல்டிங் பணியின்போது ஏற்பட்ட தீப்பொறி பட்டு, வீட்டில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து ஒருவர் பலியானதாகக் கூறப்படும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொமராயனூரில் தீபக் என்பவரின் வீட்டின் முன்பு சிமெண்ட் ஷெட் அமைப்பதற்காக வெற்றிவேல் என்பவரும் அவரது உறவினர் இருவரும் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பணி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தின் அருகே கடந்த ஆண்டு தீபாவளிக்காக வாங்கிவரப்பட்ட பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தாகக் கூறப்படும் நிலையில், வெல்டிங் தீப்பொறி பட்டதில் அந்தப் பட்டாசுகள் பெரும் சப்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளன. இதில் வெற்றிவேல் கை, கால்கள் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பக்கத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டி ஒன்றும் உயிரிழந்தது.
வெற்றிவேலின் உறவினர் இருவரும் தீபக்கின் மனைவி பிரியாவும் படுகாயமடைந்தனர். வெடித்துச் சிதறியவை பட்டாசுகளாக இருக்க வாய்ப்பில்லை என்றும் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகளாக இருக்கலாம் என்றும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.