தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்ட நிலையில், பிற்பகலிலேயே இலக்கு எட்டப்பட்டது. சுமார் 23 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 515 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில், கொரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம், கே என் நேரு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சென்னை முழுவதும் 200 வார்டுகளில் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. தாம்பரம் பெருநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் தலைமைச் செயலர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து, சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
இதேப்போல், மதுரை, கரூர் , நெல்லை, திருப்பூர், கோவை உட்பட அனைத்து மாவட்டங்களிலும், இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.