புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் புதிதாகக் கட்டப்படவிருக்கும் சிசிடிவி கட்டுப்பாட்டு அறை தனது கடையை மறைக்கும் எனக் கூறி, ஆவின் பால் பூத் உரிமையாளர் சேற்றில் உருண்டு புரண்ட நிலையில், அவரது கடையை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
லேனாவிளக்கு பகுதியில் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க, காவல்துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதற்கான கட்டுப்பாட்டு அறை கட்டும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.
கட்டுப்பாட்டு அறை அமையவுள்ள இடத்தின் அருகே பழனியப்பன் என்பவர் ஆவின் பால் பூத் வைத்துள்ளார். புதிதாகக் கட்டப்படும் கட்டுப்பாட்டு அறை தனது கடையை மறைக்கக் கூடும் எனக் கூறி, கட்டுமானப் பணியைத் தடுத்து நிறுத்தி தகராறு செய்தவர், திடீரென்று அங்கிருந்த சேற்றில் உருண்டு புரண்டு புலம்பத் தொடங்கினார்.
கருணை அடிப்படையில் அரசு இடத்தில் பால் பூத் வைத்துக் கொள்ள பழனியப்பனுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் அவரது இந்த செயல் தெரியவந்து, கடையை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.