தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பகல் 12 மணி நிலவரப்படி 7.48 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 515 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில், கொரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம், கே என் நேரு ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியம், தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 56% உள்ளதகவும், இன்று மாலைக்குள் அது, 60 சதவீதமாக உயரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை முழுவதும் 200 வார்டுகளில் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.
இதேப்போல், மதுரை மாவட்டத்தில் 1500 இடங்களிலும், கரூர் மாவட்டத்தில் 624 இடங்களிலும், நெல்லை மாவட்டத்தில் 435 இடங்களிலும், கோவை மாவட்டத்தில் 484 இடங்களிலும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் மாலை 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.