தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலம் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பல்வேறு முறைகேடுகள் மூலம் கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதுவரையில் 11 கிலோ தங்கம், 10 கிலோ சந்தன மர பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இந்திய வனப்பணி அதிகாரி வெங்கடாசலம் 2013 - 2014 ஆண்டுகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலராகவும், 2017 - 2018 ஆண்டுகளில் மாநிலச் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலராகவும் இருந்தார்.
இவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதைக் கண்டுபிடித்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர் அது குறித்து வழக்குப் பதிந்துள்ளனர்.
இந்தப் பதவிக் காலத்தில் சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்று வழங்கத் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களிடம் 5 இலட்ச ரூபாய் முதல் 15 இலட்ச ரூபாய் வரை லஞ்சம் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு முன் ஏப்ரல் மாதத்தில் மட்டும் அவசர அவசரமாக அறுபதுக்கு மேற்பட்ட தொழிற்சாலைகளுக்குத் தடையில்லாச் சான்று வழங்கியதில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வியாழனன்று சென்னை கிண்டியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைமையகத்தில் வெங்கடாசலத்தின் அலுவலகத்திலும், சென்னை வேளச்சேரியிலும், ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்திலும் உள்ள அவரது வீடுகள் உட்பட மொத்தம் 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனைகளில் மொத்தம் 11 கிலோ தங்கம், 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், 10 கிலோ சந்தனப் பொருட்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து வெங்கடாசலத்தின் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகங்களைத் திறந்து சோதனை செய்யவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.