தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலத்தின் வீடுகள் உள்ளிட்ட 11 இடங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில், 8 கிலோ தங்கம், 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலம், தொழிற்சாலைகளுக்கு தடையில்லா சான்று வழங்க பெருந்தொகை லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள அலுவலகம், அவரது வீடுகள் உள்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த சோதனையில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 8 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்களுடன், 10 கிலோ சந்தன மரத்தால் ஆன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பெரும் தொகையை வெங்கடாசலம் லஞ்சமாக பெற்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளது. தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன் அவசர அவசரமாக 52 நிறுவனங்களுக்கு அவர் ஒப்புதல் வழங்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் அவசரக் கூட்டம் நடத்தி வெங்கடாசலம் ஒப்புதல் வழங்கியதன் பின்னணியில் பெரும் லஞ்சம் கைமாறியதாக புகார் கூறப்படுகிறது.