கடலூரில் முந்திரி ஆலையில் உயிரிழந்த தொழிலாளியின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் குழு நாளை பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக எம்.பி.க்கு சொந்தமான அந்த முந்திரி ஆலையில் பணியாற்றிய கோவிந்தராசுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கோரியும் அவரது மகன் தொடர்ந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், தனது தந்தையின் உடலை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, கோவிந்தராசுவின் மரணம் தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் ஆரம்பகட்ட விசாரணை நடத்திவரும் நிலையில், அதை சிபிஐ-க்கு மாற்றுவது குறித்து முன்கூட்டியே முடிவெடுக்க முடியாது என தெரிவித்து, விசாரணை அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.