திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி சந்தைக்குக் கொண்டு சென்ற தக்காளிகளை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் சென்றனர். ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, பொட்டிக்காம்பட்டி, காப்பிலியபட்டி, கள்ளிமந்தையம் பகுதிகளில் தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக விளைச்சல் அதிகரித்ததால், தக்காளி ஒரு கிலோ 6 ரூபாய் முதல் 7 ரூபாய் மட்டுமே விலை போவதாகக் கூறும் விவசாயிகள், சாகுபடி செலவு, போக்குவரத்துச் செலவு, சந்தை கமிஷன் என எதற்கும் கட்டுபடியாகவில்லை எனக் கூறுகின்றனர்.
இதனால் சிலர் சந்தைக்குக் கொண்டு சென்ற தக்காளிகளை சாலையோரம் கொட்டிச் சென்றனர். அப்பகுதியில் தக்காளியைப் பதப்படுத்தி வைக்க குளிர்பதனக் கிடங்கும், தக்காளி ஜூஸ் தொழிற்சாலையும் அமைத்துத் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.