தருமபுரியில் மாற்று சாதி பெண்ணை காதலித்து மணமுடித்த இளைஞரின் உறவினர்களை கடத்திச் சென்று சிறுநீரை குடிக்கச் சொல்லி பெண் வீட்டார் துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் மேலும் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செம்மனஹள்ளியைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞரும், பன்னிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகனா என்ற பெண்ணும் காதலித்து, சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட நிலையில், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு நிலவியுள்ளது.
இந்த நிலையில், ரமேஷின் உறவினர்கள் 3 பேரை காரில் கடத்தி சென்று, சிறுநீர் கழித்து குடிக்க சொல்லி துன்புறுத்தியதாக பெண் வீட்டார் மீது பாலக்கோடு போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மேலும் 7 பேர் என, மொத்தம் 12 பேர் மீது வழக்கு பதிந்து, தலை மறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.