முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் 33லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 551 யூனிட் மணல் கொட்டி வைக்கப்பட்டுள்ளதாக கனிமவளத்துறை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்பித்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது, ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணியின் இல்லத்திற்குப் பின்புறம் காலி இடத்தில் மணல் கொட்டிவைக்கப்பட்டுள்ளதாக கனிம வளத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், கே.சி.வீரமணியின் வீட்டுக்கு பின்புறமாகக் குவிக்கப்பட்டிருந்த மணலை ஆய்வு செய்து கனிமவளத்துறை ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில் மொத்தமாக 551 யூனிட் மணல் உள்ளது எனவும், அதன் மதிப்பு 33 லட்சம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டிவைக்கப்பட்டுள்ள மணலுக்கு உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு சட்டவிரோத மணல் பதுக்கல் பிரிவில் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.