இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ரூபாய் 60 லட்சம் மதிப்பிலான புதிய கிராமப்புற அரசு மருத்துவமனை கட்டிட கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாகக் கூறி அப்பகுதி கிராம இளைஞர்கள் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர். தொட்டால் உதிரும் எம்.சாண்ட் கட்டுமானம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அதிநவீன வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டுமான பணிகள் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் நடந்துவந்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு தற்போது பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் இந்த மருத்துவமனை கட்டுமானப் பணிகள் அனைத்தும் தொட்டால் உதிரும்வகையில் பவுடர் போன்ற எம்.சாண்ட் அதிகமாக கலக்கப்பட்டு தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி தற்போது நடைபெற்று வரும் தொட்டால் உதிரும் புட்டுபோன்ற கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினர்
இதுகுறித்து பொதுப்பணித்துறை கட்டுமான பணி இளநிலை பொறியாளர் ஜவகர் கூறுகையில், இந்த கட்டிடத்தை தரக்கட்டுப்பாட்டு ஆய்வுக்குழுவினர் அவ்வப்பொழுது நேரில் சென்று ஆய்வு செய்து கட்டிடத்தின் தரத்தை உறுதி செய்து அதற்கான சான்று அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் தற்போது பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அதற்கான பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொட்டால் பெயர்ந்து விழும் இந்த கட்டிடத்தை எப்படி ஆய்வு செய்து சான்று அளித்தார்கள் ? என்று அக்கிராம இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
கமுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் புஷ்பவல்லி மாரிமுத்து என்பவர் பெயரில் இந்த ஒப்பந்த பணி எடுக்கபட்ட நிலையில் இந்த பணியை தற்போது பரமக்குடியை சேர்ந்த குலாம்நபி என்பவருக்கு கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது இதற்கான பணியை செய்து வரும் குலாம்நபி தரமற்ற முறையில் செய்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கட்டட பணி இன்னும் முழுமை பெறாத நிலையில் , கட்டிடத்திற்கு முழுமையாக தண்ணீர் தெளித்து விட வேண்டும் அபோது தான் கட்டடத்தின் மீதுள்ள சிமெண்டு பூச்சு பலம் பெறும். அதைக் கூட செய்யவிடாமல் அக்கிராம இளைஞர்கள் இடையூறு செய்து தங்களது பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று குலாம் நபி குற்றஞ்சாட்டினார்.
வருங்காலத்தில் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனை கட்டிடமே ஆட்டம் காணும் நிலையில் உள்ளதால் அதிரிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி தரமான முறையில் கட்டுமான பணிகள் நடக்க ஆவண செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.