புதுக்கோட்டை அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழை நீரில் கடந்து செல்ல முயன்றபோது கார் மூழ்கி அரசு பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருமகளுடன் காரில் சென்ற மாமியார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் தொடையூரில் ஆளில்லா ரயில்வே கேட் உள்ளது. எனவே, பொதுமக்கள் ரயில்வே கேட் பகுதியை கடந்து செல்வதற்காக ரயில்வே நிர்வாகம் சுரங்கப் பாதை அமைந்துள்ளது. மழை பெய்யும் நேரங்களில் சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி அதைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருந்ததால் மாற்றுப் பாதை கோரி, பொதுமக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. வழக்கம்போல, தொடையூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் அதிக அளவுக்கு தேங்கியுள்ளது.
லாரி சென்றாலும் மூழ்கி சிக்கிக் கொள்ளும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், ஓசூரில் அரசு மருத்துவராகப் பணியாற்றும், தொடையூரைச் சேர்ந்த மருத்துவர் சத்யா, அவருடைய மாமியார் ஜெயா ஆகிய இருவரும் காரில் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இரவு 8 மணியளவில், போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், ரயில்வே சுரங்க பாதையில் தேங்கியிருந்த நீரின் அளவை கணிக்க இயலாமல், மருத்துவர் சத்யா காரை செலுத்தியுள்ளார். அதலபாதாளத்திற்குள் பாய்ந்ததுபோல கார் முழுமையாக நீருக்குள் மூழ்கிவிட, சீட் பெல்ட் அணிந்திருந்த சத்யாவால் காரில் இருந்து வெளியேற முடியவில்லை என கூறப்படுகிறது.
மாமியார் பின்கதவை திறந்து வெளியேறியுள்ளார். சம்பவம் நிகழ்ந்தபோது அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக சுதாரித்து, கார் கதவை உடைத்து மருத்துவரையும், நீரில் தத்தளித்த மாமியாரையும் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சென்ற நிலையில், மருத்துவர் சத்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மாமியார் ஜெயா உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த அப்பகுதி மக்கள், நீர் தேங்கும் சுரங்கப்பாதைக்கு மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தியும், ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.