தாம்பரம் சேலையூர் சாலையில் இயங்கி வந்த காரைக்குடி பிரியாணி பிரதர்ஸ் ஓட்டலில் 20 கிலோ பழைய பிரியாணியுடன் , 45 கிலோ கெட்டுபோன சிக்கன் மட்டன் மற்றும் மீன் இறைச்சிகள் கைப்பற்றப்பட்டதால் ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. சாப்பிடுவோரின் உடலுக்கு வேட்டு வைக்கும் ஓட்டலுக்கு பூட்டு போடப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
பழைய அரிசியில் செய்த பிரியாணிக்கு ருசி அதிகம் என்பார்கள்..! ஆனால் பழைய பிரியாணியையே சுடவைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய புகாருக்குள்ளாகி உள்ளது, சென்னை தாம்பரம் சேலையூர் சாலையில் அமைந்துள்ள காரைக்குடி பிரியாணி பிரதர்ஸ் ஓட்டல்.
இந்த ஓட்டலில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா அங்கு நேற்றுவைத்த பிரியாணி அண்டாவுடன் வாடிக்கையாளர்களுக்கு பரிமாற ப்ரீசரில் வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்.
இஞ்சி, பூண்டு, மஞ்சள், மிளகாய்பொடி போட்ட நிலையில் நாட்கணக்கில் ப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த துர்நாற்றம் வீசிய சிக்கன் இறைச்சி ஏராளமாக வைக்கப்பட்டிருந்தது. முந்தைய நாள் அவித்த 50 முட்டைகளையும் ப்ரீசரின் வைத்திருந்தனர். அத்தனையையும் நுகர்ந்து பார்த்த அதிகாரி அனுராதா , ஒட்டு மொத்தமாக கெட்டுப்போன 45 கிலோ தரமற்ற சிக்கன் மட்டன் மற்றும் மீன் இறைச்சி வகைகளை பறிமுதல் செய்தார்
கெட்டுபோன இறைச்சிகளை பறிமுதல் செய்வதை தடுத்த கடையின் உரிமையாளர் ஆங்கிலத்தில் பேசி அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அதற்கு பணியாத அவர், அத்தனை இறைச்சிகளையும் பறிமுதல் செய்து மூட்டையாக கட்டி அதனை அழிக்க உத்தரவிட்டார்
பிரியாணி முதல் எல்லா உணவுகளுமே கெட்டு போயிருந்ததால் 7 நாட்களுக்குள் புகாரிலுள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய வேண்டும் என்று எச்சரித்ததோடு அந்த ஓட்டலுக்கு பூட்டு போட்டு விட்டு சென்றார்
அபிமான உணவான பிரியாணியை ஓட்டல் உரிமையாளர்கள் தயார் செய்து பழைய சோறு போல ப்ரீசரில் வைத்திருக்கும் விதத்தை பார்த்தால் பிரியாணி சாப்பிடும் ஆசையே போய்விடும் என்று ஆதங்கம் தெரிவிக்கின்றனர் உணவு பிரியர்கள்.