முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு தொடர்புடைய 35 இடங்களில் நடைபெற்ற சோதனையில், 34 லட்ச ரூபாய் ரொக்கம், 5 கிலோ தங்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில், அவரது வீடு, நண்பர்கள், உறவினர்கள், நெருங்கிய அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
2016-2021 கால கட்டத்தில், கே.சி.வீரமணியின் சொத்து மதிப்பு 654 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும், திருப்பத்தூர், சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வேட்பு மனுவில் சொத்து மதிப்பாக குறிப்பிடப்பட்டிருந்த 25 கோடியை தவிர, கூடுதலாக 28 கோடியே 78 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஏறத்தாழ 14 மணி நேரம் சோதனை நடத்தி 34 லட்ச ரூபாய் ரொக்கம், 5 கிலோ தங்கம், ரோல்ஸ் ராய்ஸ் உள்பட சொகுசு கார்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சோதனை முடிந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கே.சி.வீரமணி, போதிய ஆதாரங்கள் கிடைக்காமல் லஞ்ச ஒழிப்பு துறையினர் திரும்பி சென்றதாகவும், எந்த வழக்கையும் நீதிமன்றம் வாயிலாக சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.