தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்க உள்ள ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, காவல் ஆணையர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
புதிய ஆளுநருக்கு போக்குவரத்து காவல்துறையினர் மரபுப்படி 12 இருசக்கர வாகனங்களில் விமான நிலையம் முதல் ஆளுநர் மாளிகை வரை அணிவகுத்து சென்று வரவேற்பு வழங்கினர். மேலும் ஆளுநர் மாளிகை வளாகத்தில் காவல்துறையின் குதிரைப் படையினர் 12 குதிரைகளில் அணிவகுத்து புதிய ஆளுநருக்கு வரவேற்பளித்தனர்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி வருகிற 18 ம் தேதி பதவியேற்கிறார். 1976 ம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கிய ஆர்என் ரவி, மத்திய அரசு உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி 2012 ல் ஓய்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு முதல் நாகலாந்து ஆளுநராக பதவி வகித்தார்.