நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சொத்து தர மறுத்ததால் திமுக முன்னாள் எம்பி சோமசுந்தரத்தின் பேரனை, மனைவி கண்முன்னே படுகொலை செய்த சொந்த மருமகன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க., மாநிலங்களவை எம்.பி. ஜி.பி.சோமசுந்தரம். சேலத்து பெரியார் என்ற பெயர் பெற்ற இவருக்கு ராசிபுரத்தில் சிலைவைக்கப்பட்டுள்ளது. இவரது பேரனும் பெரும் விவசாயியுமான 58 வயதான ராஜேந்திரனுக்கு கோடிக்கணக்கில் அசையும், அசையா சொத்துக்களும், ஏக்கர் கணக்கில் மாந்தோப்பு மற்றும் தென்னந்தோப்புகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
ராஜேந்திரனுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர், திருமணமான மகன் சுரேஷ் ஆந்திராவிலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். மகள் சுபி கடந்த 8 மாதங்களுக்கு முன் , பக்கத்து தோட்டத்தில் வேலைபார்த்து வந்த சேலம் மாவட்டம் மஞ்சினியைச் சேர்ந்த நவீன் என்பவரை பேஸ்புக் மூலம் காதலித்து, வீட்டை விட்டு வெளியேறி பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ராஜேந்திரன், தனது மகளுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி இரவு ராஜேந்திரனின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று கட்டிலில் படுத்திருந்த ராஜேந்திரனை கத்தியால் குத்தி கொலை செய்ததோடு, பீரோவில் இருந்த 41 ஆயிரம் பணம் மற்றும் நில பத்திரங்கள், வீட்டு பத்திரங்களை எடுத்துக்கொண்டு தப்பியது. மனைவி கண் முன்பாக அரங்கேறிய இந்த கொடூர கொலை குறித்த விசாரணையை முன்னெடுத்த போலீசார் , மகளின் கணவர் நவீனையும், கொலைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்த ராஜாகிருஷ்ணன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 6 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் ராஜேந்திரனின் பக்கத்து தோட்டத்துக்காரரான ராஜாகிருஷ்ணன் என்பவரது வீட்டில் 4 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்த நவீன், செல்வந்தரான ராஜேந்திரனின் கோடிக்கணக்கான சொத்துக்களை குறிவைத்து அவரது மகளிடம் முக நூல் மூலம் அறிமுகமாகி காதல் வலையில் வீழ்த்தி தந்திரமாக திருமணம் செய்துள்ளான். அதன் படி திருமணம் முடிந்த கையோடு அவரது மகளை தூண்டிவிட்டு தனக்கு வரதட்சனை கொடுக்கச் சொல்லியும், வழக்கமான செய்முறைகளை செய்யச் சொல்லியும் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்க மறுத்த ராஜேந்திரன் தனது சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்க தொடங்கி உள்ளார்.
கடந்த வாரம் கூட தனக்கு சொந்தமான நிலம் ஒன்றை ராஜேந்திரன் குறைந்த விலையில் விற்றதாக நவீனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன்னரும் ராஜேந்திரன் சில நிலங்களை குறைந்த விலைக்கு விற்றதோடு, அதில் கிடைத்த பணத்தை தவறான சகவாசத்தால் இழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், நேரடியாக வீட்டுக்குச் சென்று சொத்துகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து மாமனார் ராஜேந்திரனுடன் தகராறில் ஈடுபட்ட முகநூல் மருமகன் நவீன், இப்படியே விட்டால் எங்கே சொத்துக்கள் தனக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அவரை தீர்த்துக் கட்ட திட்டம் போட்டுள்ளான். சொத்தில் பங்குதருவதாக நவீன் கூறியதை நம்பி பக்கத்து வீட்டுக்காரனான ராஜாகிருஷ்ணன் இதற்கு உடந்தையாக இருந்துள்ளான்.
அவனது ஏற்பாட்டில் 2லட்சத்து 13ஆயிரம் ரூபாய் பேரம் பேசி 4 பேர் கொண்ட கூலிப்படையை போர்டு காரில் அழைத்து வந்த நவீன், ராஜேந்திரனை அடையாளம் காட்டியுள்ளான். சம்பவத்தன்று நவீன் கூறியபடி கொலையாளிகள் ராஜேந்திரனை தீர்த்துகட்டிவிட்டு சொத்துபத்திரங்களை திருடிச்சென்றது விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நவீன் உள்ளிட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
கோடிக்கணக்காண ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக செல்வந்தர் வீட்டு பெண்களை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து வந்த ரோமியோக்கள், தற்போது சொத்து கொடுக்காத மாமனாரை கூலிப்படை ஏவி கொலை செய்யும் அளவுக்கு துணிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.