கரூர் அருகே, மேம்பாலத்தில் ஏறும்போது பாரம் தாங்காமல் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி நின்ற லாரி மீது, மற்றொரு லாரி மோதிய விபத்தில், இடிபாடுகளிடையே சிக்கிய ஓட்டுநர் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார். தேசிய நெடுஞ்சாலையில் அளவுக்கு அதிகமான சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளால் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல முடியாததால் சீரான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதும், விபத்துகளும் தொடர் கதையாகி வருகிறது.
சிமெண்ட் கலவை, ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று கரூரில் இருந்து திருச்சி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அளவுக்கு மீறி, அதிக பாரத்தை ஏற்றிக் கொண்டு சென்றதால், உப்பிடமங்களம் பிரிவு அருகே மேம்பாலத்தில் ஏறமுற்பட்டபோது, முக்கி முணகிச் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது. இதில் முன்பக்க டயர்கள் கழன்றதால், சாலையை மறித்தபடி லாரி அந்த இடத்திலேயே நகர முடியாமல் நின்றுவிட்டது.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த ரோந்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதோடு, லாரியை மீட்பது குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிமெண்ட் கலவை, ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மற்றொரு லாரி, விபத்துக்குள்ளாகி நின்ற லாரி மீது பலமாக மோதியது.
மோதிய லாரியின் டிரைவர் கேபின் முற்றாக சிதைந்ததில், சிதிலங்களுக்கு இடையே ஓட்டுநர் சிக்கிக் கொண்டார். அங்கிருந்த போலீசாரால், இடிபாடுகளில் சிக்கியிருந்த ஓட்டுநரை மீட்க முடியவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி, சிக்கியிருந்த லாரி ஓட்டுநரை சிறு காயங்களுடன் மீட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி விபத்துக்கு உள்ளானவுடன் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்தை சரி செய்ததாகவும், மற்றொரு லாரி ஓட்டுநர் கவனிக்காமல் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் அதிக பாரத்துடன் செல்லும் லாரிகளால் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல முடியாததால் சீரான போக்குவரத்திற்கு இடையூறும், விபத்துகளும் ஏற்படுகின்றன. அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்களை கண்டறிந்து தடுக்க வேண்டிய, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.
எனவே, பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளை கண்காணித்து, வரம்புக்குட்பட்ட அளவில் பாரம் ஏற்றிச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுப்பதே இதற்கு தீர்வாக அமையும்.