பெரியப்பா குடும்பத்தினரோடு ஒப்பிட்டு தனது பெற்றோரை தரக்குறைவாகப் பேசி வந்த ஆத்திரத்தில் தாத்தாவையும் பாட்டியையும் வீட்டோடு தீ வைத்துக் கொளுத்திய 16 வயது பேரன் கைது செய்யப்பட்டுள்ளான். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரங்கேறியுள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியைச் சேர்ந்த காட்டுராஜா - காசியம்மாள் தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இந்த 3 மகன்களும் தங்கள் குடும்பத்தினருடன் தனித்தனியாக குடித்தனம் நடத்தி வந்த நிலையில், தென்னங்கீற்று வேயப்பட்ட கூரை மீது தகர சீட்டுக்கள் பொறுத்தப்பட்ட வீட்டில், காட்டுராஜா தனது மனைவி காசியம்மாளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் திங்கட்கிழமை அதிகாலையில் அவர்களது குடிசைவீடு தீப்பற்றி எரிய வீட்டிற்குள் இருந்து அலறல் சப்தம் கேட்டது.
அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, வீட்டின் கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டு இருந்த நிலையில் மேற்கூறை மீது தகரத் தகடுகள் இருந்ததால் உடனடியாக பற்றி எரிந்த கூரையின் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முடியாத சிக்கல் ஏற்பட்டது.
தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் வீட்டுக்குள் சிக்கியிருந்த காட்டுராஜாவும் காசியம்மாளும் தீயில் கருகி பரிதாபமாக பலியாகினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் உயிரிழந்த தம்பதியின் 16 வயது பேரன் தான், அவர்களை வீட்டுக்குள் வைத்து பூட்டி உயிரோடு தீவைத்து கொளுத்தியது தெரியவந்தது.
பாட்டி தாத்தா இருவரும் தனது தந்தை-தாயை, தனது பெரியப்பாவுடன் ஒப்பிட்டு இழிவாக பேசுவதை வாடிக்கையாக செய்ததால் ஆத்திரத்தில் வீட்டோடு பூட்டி தீவைத்ததாக 3ஆவது மகன் வழிப் பேரனான அந்த சிறுவன் போலீசில் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.
கொலையான தம்பதியின் முதல் இரண்டு மகன்களும் பல்வேறு தொழில்கள் செய்து குடும்பத்துடன் வசதியாக இருப்பதாகவும், 3ஆவது மகன் மட்டும் கூலி வேலைக்குச் சென்று வறுமையில் உழன்று வருவதாகவும் கூறப்படுகிறது. காட்டுராஜா - காசியம்மாள் அவ்வப்போது முதல் இரண்டு மகன்களின் வசதி வாய்ப்பை சுட்டிக்காட்டி 3ஆவது மகனையும் அவரது மனைவியையும் தரக்குறைவாக பேசுவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல், அவர்களது பிள்ளைகளையும் இந்த சிறுவனோடு ஒப்பிட்டு இழிவுபடுத்தி பேசிவந்ததாகவும்,
இதுபோன்ற சமயங்களில் தாத்தா பாட்டியோடு சிறுவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.
ஞாயிற்றுக்கிழமை இரவும் வழக்கம்போல் சிறுவன் கண் முன்பே, அவனது பெற்றோரை தாத்தா காட்டுராஜா, பாட்டி காசியம்மாள் ஆகியோர் இழிவாகப் பேசியதாக கூறப்படுகின்றது. இதனால் அந்த சிறுவன் மன ரீதியாக அழுத்தத்திற்குள்ளாகி கடுமையாக ஆத்திரமடைந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இதையடுத்து, அதிகாலை தனது தாத்தா - பாட்டி தூங்கும்போது கதவை வெளிபக்கமாக பூட்டி, வீட்டுக்கூரையில் தீ வைத்து விட்டு தப்பியதாக போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் சிறுவன் தெரிவித்துள்ளான். சிறுவனைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொதுவாகவே சிறியவராயினும், பெரியவராயினும் அவர்களின் திறமையையோ, பொருளாதார நிலையையோ மற்றவரோடு ஒப்பிட்டு பேசுவது உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறும் மனோதத்துவ நிபுணர்கள், சிலரை இதுபோன்ற விபரீத மனநிலைக்கும் அது கொண்டு செல்லும் என்று எச்சரிக்கின்றனர்.