விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகத்திலுள்ள பொருட்களை எடுக்க முயன்றபோது, அங்கிருந்த கந்தக அமிலம் கொட்டியதில் 4 மாணவிகள் காயமடைந்தனர்.
இந்த பள்ளியில் உள்ள ஆய்வகம் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக இடிக்கப்பட்டு வருகின்றது. ஆய்வகத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், மற்றொரு பகுதியிலிருந்த கண்ணாடி குடுவைகள் உள்ளிட்ட பொருட்களை சனிக்கிழமைக்குள் அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை ஒரு வாரத்துக்கு முன்பே பள்ளித் தரப்பிடம் அறிவுறுத்தியிருந்தது.
ஆனால் பொருட்களை எடுக்காமல் பள்ளித் தரப்பு தாமதப்படுத்திய நிலையில், இன்று நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வகத்தை இடிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பள்ளி மாணவிகள் 4 பேரை வைத்து தலைமை ஆசிரியர் இராஜாராம் ஆய்வக பொருட்களை அகற்ற முயன்றார் என்று கூறப்படுகிறது.
அப்போது கந்தக அமிலம் வைக்கப்பட்டிருந்த பாட்டில் மீது காங்கிரீட் துண்டு ஒன்று விழுந்து உடைந்து மாணவிகள் மீது அமிலம் தெறித்தாகச் சொல்லப்படுகிறது.
காயமடைந்த மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தலைமை ஆசிரியர் இராஜாராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.