தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்கள் உட்பட சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ஒடிசா கடலோரப் பகுதியில் மையம் கொண்டுள்ளது எனவும், இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அங்கு 24 மணி நேரத்திற்கும், அரபிக்கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.