வேறொருவரின் புகைப்படத்துடன் கூடிய ஹால்டிக்கெட்டை பெற்ற மாணவியின் மனுவை, அவசர வழக்காக சிறப்பு அமர்வு மூலம் கடந்த சனிக்கிழமை இரவு விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அம்மாணவி நேற்று நீட் தேர்வு எழுத அனுமதித்தது.
10ஆம் வகுப்பில் 92.8 சதவீத மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பில் 91.54 சதவீத மதிப்பெண்களும் பெற்ற சண்முகப்ரியா என்ற மாணவி, மருத்துவராகும் லட்சியத்துடன் 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
தேர்வுக்கு ஆன்லைனில் விவரங்களை சமர்பித்து விண்ணப்பித்திருந்த நிலையில், சனிக்கிழமை ஹால்டிக்கெட்டை பதிவிறக்கியபோது அதில் அலெக்ஸ் பாண்டியன் என்ற மாணவரின் புகைப்படமும், கையெழுத்தும் இருந்துள்ளது.
தவறை சரிசெய்யுமாறு அம்மாணவி, தேசிய தேர்வு முகமைக்கு உடனடியாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். ஆனால் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாத நிலையில், சரக்கு வாகன டிரைவராக பணிபுரியும் மாணவியின் தந்தை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகியுள்ளார்.
சனிக்கிழமை இரவு சிறப்பு அமர்வாக இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், இந்த தவறு மாணவியால் நேர்ந்தது அல்ல, என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவி நன்கு படிக்கக் கூடியவர் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்ட நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில், அந்த மாணவி, மதுரை சோலைமலை பொறியியல் கல்லூரி மையத்தில் தேர்வு எழுதினார்.