நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மேட்டூர் மாணவர் தனுஷ் தற்கொலை செய்த விவகாரத்தை, சட்டப்பேரவையில் எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், அதுகுறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி வெளிநடப்பு செய்தனர். மாணவர் தனுஷ் தற்கொலைக்கு திமுக அரசு தான் பொறுப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் ரத்து என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று கூறியும், மேட்டூர் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டதை குறிக்கும் வகையிலும் அதிமுக எம்எல்ஏக்கள், சட்டையில் கருப்பு கொடி அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு ரத்து என்ற திமுக வாக்குறுதி என்னவாயிற்று என கேள்வி எழுப்பினார்.
அப்போது மேட்டூர் மாணவன் தனுஷ் தற்கொலை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். இதைத் தொடர்ந்து நீட் தேர்வு மற்றும் மாணவர் தற்கொலை தொடர்பாக திமுக-அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவர் தனுஷ் மரணம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
நீட் விவகாரத்தில் மாணவர் தனுஷ் தற்கொலைக்கு முழுக் காரணம் திமுக அரசு தான் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வுக்கு எதிராக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை அயோக்கியத்தனம் என திமுக எம்பி ஆ.ராசா கூறியதாகவும், தற்போதும் அந்த கருத்து பொருந்துமா? என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.