மகாகவி பாரதியாரின் நினைவுநாளான செப்டம்பர் 11ஆம் தேதி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசப்பற்று - தெய்வப்பற்று - தமிழ்ப்பற்று - மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார் என புகழாரம் சூட்டியுள்ளார். சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் எழுதியதால்தான் பாரதியார் கவிதை வரிகளாய் உலவி வருகிறார் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதனையொட்டி பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி, மாணவர் ஒருவருக்கும் மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் “பாரதி இளங்கவிஞர் விருது” வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாரதியின் வாழ்க்கை குறித்தும் படைப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்களுக்குத் தலா 3 லட்ச ரூபாயும் விருதும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்றும் பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து 'மனதில் உறுதி வேண்டும்' என்ற புத்தகமாக உருவாக்கி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 37 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ்ச்சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் “பாரெங்கும் பாரதி” என்ற தலைப்பில் நடத்தப்படும் என்றும் பாரதியாரின் நூல்கள் மற்றும் அவரைப் பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து வைக்க 'பாரதியியல்' என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை, உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசு சார்பில் நிதியுதவி உள்ளிட்ட அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.