வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை 60 நாட்களில் நீக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வாகனங்களில் பயன்படுத்தும் கட்சிக் கொடிகளை தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தினால் போதும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், ரவுடிகள் ஆகியோர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக தங்களது வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளதாகக் கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு விசாரித்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர், பிரஸ், போலீஸ் போன்ற ஸ்டிக்கர்களை வாகனங்களில் அதிகமாக ஒட்டுகின்றனர் என்றும் அந்த வாகனங்களைப் பலர் சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்துவது தெரியவருகிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு தேனியில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரிலிருந்து ஏராளமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
அரசியல் கட்சியினர் தங்கள் கட்சிக் கொடிகளையும் தலைவர்களின் புகைப்படங்களையும் வாகனங்களில் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தலாம் என்றும் மற்ற நேரங்களில் அதன் பயன்பாடு தேவையற்றது என நீதிமன்றம் கருதுவதாகவும் குறிப்பிட்டனர்.
வாகனத்தில் தடை செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் அல்லது நிறம் ஊட்டப்பட்ட கண்ணாடிகள் இருந்தால் அதனை நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும், வாகனத்தின் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை நீக்க வேண்டும், வாகனத்தின் நம்பர் போர்டுகள் மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதிகள், அவற்றை 60 நாட்களில் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டனர். விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும் அல்லது வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.