தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவி இதுவரை நாகாலாந்து ஆளுநராக இருந்து வந்தார். தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர், உளவுத்துறை இயக்குனர் உள்பட பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
பஞ்சாப் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த பன்வாரிலால் புரோகித், அம்மாநிலத்தின் முழுநேர ஆளுநராக நீடிப்பார் என குடியரசு தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். புதிய ஆளுநரின் வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும் என்று தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் ஆளுநராகப் பொறுப்பேற்கும் பன்வாரிலால் புரோகித்தை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர்பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். தம்மீது தனிப்பட்ட முறையில் அன்புடன் பழகியவர் என்றும், இனிமையான நட்பு அவருடையது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உத்தரகாண்டின் ஆளுநராக ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் குர்மீத் சிங் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அசாம் ஆளுநர் ஜகதீஷ் முகி கூடுதலாக, நாகலாந்து ஆளுநர் பொறுப்பை கவனிப்பார் என்றும் குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.