விநாயகர் சதுர்த்தியையொட்டித் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கொரோனா பெருந்தொற்றைக் கூடிய விரைவில் முறியடிக்கவும், அனைவரும் மகிழ்ச்சியாகவும், உடல்நலத்தோடும் வாழவும் இறைவன் கணேசன் அருள்வார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள செய்தியில், விநாயகரின் அருளால் உலகெங்கும் அன்பும் அமைதியும் நிறையட்டும், நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும், வீடெங்கும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் தவழட்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டிக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் விடுத்துள்ள செய்தியில், கொரோனா தொற்றுக்கு எதிரான நமது முயற்சிகள் வெற்றிபெறவும், அனைவருக்கும் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கவும் விநாயகர் அருளுவார் எனக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி விழாவைக் கொண்டாடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், இந்த நன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, வளம், நலம் உண்டாகட்டும் எனத் தெரிவித்துள்ளார்.