தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அமைச்சர் துரைமுருகனுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே சட்டப்பேரவையில் சூடான விவாதம் நடைபெற்றது.
காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு, ரவுடியிசம் ஆகியன இல்லை எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட துரைமுருகன், அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் காவல்துறையினர் வேன் மீது ஏறி நின்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, 1969ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் நாள் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு பற்றி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி பேசியதைச் சுட்டிக்காட்டினார்.
காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும்போது Shoot to Kill என்ற முறைதான் கடைப்பிடிக்கப்படுவதாகவும், முதலில் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசிப் பின்பு தடியடி நடத்திப் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்துவார்கள் என்றும், அப்படி நடத்தப்படும் துப்பாக்கிச்சூட்டில் யாரும் உயிரிழந்தால் அதற்குக் காவல்துறை பொறுப்பல்ல என்று கருணாநிதி பேசியதையும் நினைவுகூர்ந்தார்.