மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் 2019ஐ ரத்து செய்யக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியவுடன், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் 2019ஐ ரத்து செய்யக் கோரும் தனி தீர்மானத்தை தாக்கல் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சட்டம், மதசார்பின்மை கோட்பாட்டிற்கும், மத நல்லிணக்கத்திற்கும் உகந்தது இல்லை என்றார்.
அகதிகளாக நாட்டுக்கு வருபவர்களை அரவணைக்காமல் மத ரீதியாகவும் பாகுபடுத்தி பார்க்கும் வகையில் இருக்கிறது என சாடிய முதலமைச்சர், நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்க அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச் சார்பின்மை கோட்பாடினை நிலைநிறுத்த, இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2019ஐ ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்துவதாக கூறினார்.
இலங்கை தமிழர்கள் பற்றி மத்திய அரசு கவலைக் கொள்ளவில்லை எனவும், அவர்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் சி.ஏ.ஏ. சட்டம் இருப்பதாக கூறிய முதலமைச்சர், ஏற்கனவே அகதிகளாக துன்பத்துடன் வருபவர்களை மேலும் துன்பப்படுத்தும் வகையிலும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் சி.ஏ.ஏ. சட்டம் இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, முதலமைச்சர் கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார். முன்னதாக, தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.