பழம் பெரும் பாடலாசிரியரும், கவிஞருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. அறுபதுகளில் தொடங்கி, அரை நூற்றாண்டு காலம் தனது ரசனையான எழுத்துக்கள் மூலம் அறிவுநுட்பமான பாடல்களை அள்ளித் தந்த புலமைப் பித்தனின் வாழ்க்கை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...
கோவை மாவட்டத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்த புலமைப்பித்தனின் இயற்பெயர் ராமசாமி ஆகும். 1965-இல் திரைப்படங்களில் பாடல் எழுதும் பெருங்கனவோடு சென்னை வந்த அவர் முதலில் சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். பின்னரும், தனது கனவை நனவாக்க விடா முயற்சி எடுத்து வெற்றி கண்ட புலமைப்பித்தன், குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இடம்பெற்ற "நான் யார் நான் யார்?" என்ற பாடலின் மூலம் மக்கள் எல்லோருக்கும் தான் யார் என்று தெரியவைத்தார்.
ஆயிரம் நிலவே வா, ஓடி ஓடி உழைக்கனும், பாடும் போது நான் தென்றல் காற்று, உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி உள்ளிட்ட புலமைப்பித்தன் எழுதிய பாடல்கள் இன்றளவும் ரசிக்கத்தக்கவை.
எம்.ஜி.ஆருக்கு ‘இதயக்கனி’ படத்தில் இவர் எழுதிய 'நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற...' என்ற பாடல் மிகவும் புகழ்பெற்றது. எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமாக இருந்ததால், அதிமுகவின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர் புலமைப்பித்தன். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக்கும் புலமைப்பித்தன், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக்கிறார்.
மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்ற ஏராளமான திரைப் பாடல்களை புலமைப்பித்தனுக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயோதிகம் காரணமாக உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புலமைப்பித்தன் காலமானார். புலமைப்பித்தன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.