தமிழகத்தில் புதிதாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதியாக 5 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றார்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக்கில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 25,009 பேருக்கு மாதந்தோறும் 500 ரூபாய் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் எனவும், இதற்காக ஆண்டொன்றுக்கு 15 கோடி ரூபாய் நிதி கூடுதல் செலவாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.