சபாநாயகர் அனுமதித்தால் நீட் தேர்வு குறித்து நாளையே தனி விவாதம் நடத்த தயார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கன்னியாகுமரி அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் பேசும் போது, நீட் தேர்வுக்கான அறிவிக்கை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தமிழகத்திற்கு வந்ததாக கூறப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்டதால் தான் நாடு முழுவதும் நீட்தேர்வு வந்ததா என அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் குறித்து விவாதிக்க ஒரு நாள் முழுவதும் தேவை என்று குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரு முறை அல்ல பிரதமரை 3 முறை சந்தித்து வலியுறுத்தியதாக தெரிவித்தார்.