கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் சோதனைச்சாவடி அருகே, சாலையில் சென்ற எஸ்யுவி காரில் இருந்து பெண் சடலம் கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அரை நிர்வாணமாக சடலம் கிடந்தததால், கொலை செய்யப்பட்டு உடல் சாலையில் தூக்கி வீசப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சின்னியம்பாளையம் சோதனைச்சாவடி அருகே சாலையில் பெண் சடலம் கிடப்பதாக, அவ்வழியே சென்றவர்கள், போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கு நேற்று காலை தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது வாகனங்கள் ஏறி இறங்கியதில் சடலம் உருக்குலைந்து கிடந்துள்ளது. அரை நிர்வாணமாக, அடையாளம் காண முடியாத வகையில் கிடந்த, 45 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
விபத்தாக இருக்கலாம் என கருதிய போலீசார், விபத்தை ஏற்படுத்தியது யார் என கண்டறிய அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதிகாலை 5.45 மணியளவில் சாலையில் சென்ற எஸ்யுவி காரில் இருந்து சடலம் விழும் காட்சி, சிசிடிவி-யில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. அதன் பிறகு சாலையில் சென்ற வாகனங்கள் ஏறி இறங்கியதில் உடல் சிதைந்துள்ளது. பெண்ணின் உடல் அரை நிர்வாணமாக கிடந்ததால், கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டு பின்னர் உடல் சாலையில் தூக்கி வீசப்பட்டதா, சாலை விபத்தில் சக்கரத்தில் சிக்கி இழுத்து வரப்பட்டதா, சடலமாகக் கிடந்த பெண் யார் என்பது குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மரணத்திற்கான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.