தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17, சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் இவை இரண்டும் தான் பெரியாரின் அடிப்படைக் கொள்கை என்றும், சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தன ஒழிப்பு ஆகிய இரண்டும் தான் அவரது இலக்குகளாக இருந்தன என்றும் குறிப்பிட்டார். அடக்கி ஒடுக்கப்பட்ட மனிதர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மேன்மை அடைவதற்காக, சமூக நீதி கதவைத்திறந்து வைத்தது அவரது கைத்தடி என மு.க.ஸ்டாலின் கூறினார்
நாடாளுமன்றத்தின் வாசலுக்கே செல்லாத பெரியாரால் தான், இந்திய அரசியலமைப்புச் சட்டம் முதன்முதலாக திருத்தப்பட்டது என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள் ஆண்டுதோறும் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்த முதலமைச்சர், அனைத்து அரசு அலுவலகங்களிலும் செப்டம்பர் 17ஆம் நாள் உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம் என்றார்.