கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கேரளத்தில் ஜாமீனில் உள்ள 8 பேரிடம் மறு விசாரணை நடத்தக் காவல் துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட்டில் காவலாளியைக் கொன்று ஆவணங்களும், விலைமதிப்புள்ள பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் மறு விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சயானிடம் மறு விசாரணை நடைபெற்றது. வாளையாறு மனோஜுக்கு ஜாமீன் கிடைத்தும் இரண்டு பிணையதாரர்கள் இல்லாததால் குன்னூர் கிளைச் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் கேரளத்தில் ஜாமீனில் உள்ள சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்ஹீர் அலி, மனோஜ் சாமி, பிஜின் குட்டி ஆகிய 8 பேரையும் மறு விசாரணைக்கு அழைக்கக் காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.