நடிகை கங்கணா ரனாவத் நடித்த தலைவி படத்தின் இந்தி வெளியீட்டில் தயாரிப்பு நிறுவனத்திற்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை கொண்டு உருவான தலைவி படத்தை தியேட்டரில் வெளியிட்ட 4 வாரங்கள் இடைவெளிக்குப் பிறகு தான் ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதித்தனர்.
இந்த நிபந்தனையை தலைவி படக்குழுவும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, திட்டமிட்டபடி தலைவி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வருகிற 10-ந் தேதி திரையரங்கில் வெளியாகிறது. தலைவி படத்தின் இந்தி வெர்ஷனை 2 வார இடைவெளியிலேயே ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் விடாப்பிடியாக இருப்பதால், திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பெரிய ஹீரோக்கள் படம் என்றால், மல்டிபிளஸ்க்கள் அதற்கு தனி விதிகளை வைத்துக் கொள்வதாக அதிருப்தி தெரிவித்துள்ள கங்கனா, மாஸ்டர் திரைப்படம் 2 வார அவகாசத்துடன் வெளியிடப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.