அயோத்திதாச பண்டிதரின் 175ஆம் ஆண்டு விழாவையொட்டி வட சென்னையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார். அப்போது சிந்தனையாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர், மொழியியல் அறிஞர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட அயோத்திதாச பண்டிதர், 1891ஆம் ஆண்டு திராவிட மகாஜன சபை என்னும் அமைப்பை நிறுவியதாகவும், 1907ஆம் ஆண்டு ஒரு பைசா தமிழன் என்ற இதழைத் தொடங்கி நடத்தியதாகவும் தெரிவித்தார்.
ஓலைச் சுவடிகளிலிருந்து அச்சுப் பதிப்பாகத் திருக்குறளைக் கொண்டு வந்து சேர்த்தவர் என்றும் குறிப்பிட்டார்.
இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்குச் சாதியும் மதமும் தடைக் கற்கள் என்றும், மனிதர்களை மனிதராகப் பார்க்கும் எவரோ அவரே மனிதர் என்றும் கூறியவர் அயோத்தி தாசர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.