திருச்சி அருகே கடன் தவணையை உடனடியாக செலுத்தக் கூறி தனியார் வங்கி ஊழியர்கள் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் கண்முன்னேயே அறைக்குள் சென்று விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் குழுமணி அடுத்த பேரூரைச் சேர்ந்த 75 வயதான மருதமுத்து என்ற விவசாயி, உறையூரிலுள்ள ஈக்விட்டாஸ் என்ற சிறிய நிதி வங்கியில் வாழை சாகுபடிக்காக இரண்டரை லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
மாதம் தவறாமல் தவணைத் தொகையான 6 ஆயிரம் ரூபாயை செலுத்தி வந்த நிலையில், 3 தவணைகள் மட்டுமே இன்னும் பாக்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், போதிய வருமானமின்றி, கடந்த 2 மாதங்களாக கடன் தவணையை செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த செவ்வாய்கிழமை பேரூர் வந்த வங்கி ஊழியர்கள் 2 பேர் நிலுவைத் தொகையை உடனையாக செலுத்த வேண்டும் எனக் கேட்டு மருதமுத்து வீட்டு முன்பு அமர்ந்துகொண்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஒரு வாரத்துக்குள் தவணையை செலுத்திவிடுவதாக மருதமுத்து கூறியதாகவும், அதனை அவர்கள் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படும் நிலையில், மருதமுத்து வீட்டுக்குள் சென்று கதவை உட்பக்கமாக தாழிட்டுக் கொண்டுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். உள்ளே மருதமுத்து தூக்கில் தொங்கியதைக் கண்டு அவர்கள் கூச்சல் போடவே, வங்கி ஊழியர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
முதலில் மருதமுத்துவின் இறப்பை சந்தேகம் மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், விவசாய சங்கத்தினருடன் இணைந்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, உறையூரிலுள்ள யூக்குடாஸ் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு ஊழியர்கள் தலைமறைவாகிவிட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.