மைசூரில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரை, 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்திலுள்ள லலிதாதிரிபுரா பகுதியில், கடந்த 24-ந் தேதி தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்த எம்.பி.ஏ. மாணவியை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் மைசூரு போலீசார் விசாரணையை துவங்கினர். முதற்கட்டமாக சம்பவம் நிகழ்ந்த இடத்தில் கிடந்த பேருந்து டிக்கெட் மற்றும் காலி பீர் பாட்டிலை கைப்பற்றினர்.
பேருந்து டிக்கெட்டை வைத்து அவர்கள் ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியிலுள்ள அரசு பேருந்தில் பயணம் செய்வதர்கள் என்பதை கண்டறிந்தனர். அத்தோடு, குறிப்பிட்ட இடத்திலுள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில் மாணவியை வன்கொடுமை செய்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்துள்ளனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி அருகேயுள்ள சூசையபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பூபதி என்பவனை கைது செய்துள்ளனர். அவன் அளித்த தகவலின் பேரில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 4 பேர் சிக்கினர். இவர்கள் அனைவரும், அவ்வப்போது கர்நாடகா மாநிலத்திற்கு கும்பலாக சென்று கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
வார நாட்களில் அங்கு தங்கி வேலை செய்து வரும் இவர்கள் விடுமுறை நாட்களில் மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தனது காதலனுடன் தொடர்ந்து இரண்டு நாட்களாக சாமுண்டி மலை அடிவாரத்திற்கு வந்து செல்வதை நோட்டமிட்ட அந்த கும்பல், பின்னர் திட்டம் தீட்டி மது அருந்திவிட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 2 பேரை தேடி வரும் நிலையில், அதில் ஒருவன் தான் மாணவியின் வீட்டுக்கு போன் செய்து 4 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியவன் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரும் மைசூரு மூன்றாவது முதன்மை குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியதை அடுத்து, ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.