தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஓசனூத்து கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தன்னிடம் இச்சாதாரி நாகத்திடம் இருந்து எடுக்கப்பட்ட விலைமதிப்பில்லா நாகமணி இருப்பதாகவும் அதனை வாங்கி வைத்தால் வீட்டில் ஐஸ்வர்யம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்றும் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகும் என்றும் கதை அளந்து வந்துள்ளார்.
இதனை நம்பி அதே ஊரை சேர்ந்த பழனிகுமார், தனது கூட்டாளிகள் சிலரை அழைத்து வந்து நாகமணியை பார்க்க விரும்பியுள்ளார். சிறிய நகைப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நெல்மணியை விட சற்று பெரிய அளவிலான ஆரஞ்சு நிற கல்லை எடுத்து இது தான் நாகமணி என்றும் இரவு தானாகவே விளக்கு போல ஒளிரும் என்று வீடியோ ஒன்றை சேம்பிளுக்கு காண்பித்துள்ளார். 50 கோடி ரூபாய்க்கு மார்வாடி ஒருவர் விலைக்கு கேட்டிருப்பதாகவும் கதை விட்டுள்ளார்
இந்த வீடியோவை பார்த்ததும் பழனிக்குமாருடன் வந்த கூட்டாளிகளில் ஒருவர் அந்த நாகமணியை எடுத்துசெல்ல முயல சுப்பிரமணியன் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் நாகமணியை பார்க்க வந்த கும்பலுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பொட்டல்காட்டை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கைகலப்பை பயன்படுத்திக் கொண்டு அந்த நாகமணியை தூக்கிக் கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகின்றது.
நாகமணி குறித்து போலீசில் புகார் அளித்தால் சிக்கிக் கொள்வோம் என்று பயந்த சுப்பிரமணி தனது செல்போனை வேல்முருகன் பறித்துச்சென்று விட்டதாக புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரித்த போது இருசக்கரவாகனத்தின் நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட இளைஞரை பிடித்து விசாரித்த போது தான் செல்போனை எடுக்கவில்லை நாகமணியை மட்டுமே எடுத்தேன் என்று அதனை போலீசில் கொடுத்துள்ளார்
போலீசில் நாகமணி சிக்கிய தகவல் தெரியவந்ததும் புகார் அளித்த சுப்ரமணியன் குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார். கைப்பற்றிய நாகமணியை பிரபல நகை வியாபாரிகளிடம் கொடுத்து காவல் துறையினர் பரிசோதித்த நிலையில், அது நாகமணி இல்லை என்றும் போலியான பிளாஸ்ட்டிக் கல் என்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் , மண்ணுளி பாம்பு , இரிடியம் பெட்ரமாக்ஸ் லைட் போன்ற மோசடி வரிசையில் போலி நாகமணியும் ஒரு பணம் பறிக்கும் திட்டம், இதை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்
போலி நாகமணியை காண்பித்து கோடிகளை சுருட்ட திட்டமிட்ட சுப்ரமணியனையும் நாகமணிக்காக அடிதடி ரகளையில் ஈடுபட்ட 12 பேர் கொண்ட கும்பலையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். அதே நேரத்தில் நாகினி மோகத்தால் கோடிகள் கொட்டும் என்று நம்பி நாகமணியை தூக்கிக் கொண்டு ஓடிய மோசடி கும்பலை சேர்ந்த தம்பி, தற்போது ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார்.