திருவண்ணாமலை சாய்பாபா ஆசிரமத்தில் பாலை ஊற்றினால் தயிராகும் வித்தையை சாதாரண வெண்சங்கில் செய்து காண்பித்து பலகோடிரூபாய் மதிப்புள்ள வலம்புரிச்சங்கு என்று கோடிகளை சுருட்ட திட்டமிட்ட 8 பேர் கொண்ட சதுரங்கவேட்டை மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில் சித்தர்களும் ஞானிகளும் அமர்ந்து தியானம் செய்ததாக வரலாறு உண்டு..!
பல ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்லும் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சாய்பாபா ஆசிரமத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரேர் பீஸான வலம்புரி சங்கு என்று போலியான வெண்சங்கை வைத்து விற்பதற்கு பேரம்பேசிவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் சாய்பாபா ஆசிரமத்திற்கு சென்று பார்த்தபோது, கிரிவலப் பாதையில் இடைக்காடர் சித்தர் ஆசிரமத்தை நடத்தி வரும் கோவிந்தராஜ் என்பவரும் பண்ருட்டியை சேர்ந்த ஸ்ரீராம் உள்ளிட்டோர் அடங்கிய 8 பேர் கொண்ட கும்பல், போலியான வலம்புரி சங்கை வைத்துக் கொண்டு பல கோடி மதிப்புள்ள அரிதிலும் அரிதான பொருள் என்று கதை அளந்ததோடு, ரசாயணம் ஒன்றின் உதவியுடன் சங்கில் பாலை ஊற்றியதும் உடனடியாக தயிராகும் அதிசயத்தை செய்து காட்டினர். அந்த சங்கு தானாக அரிசியை ஈர்க்கும் வித்தையையும் செய்து காட்டி வீட்டில் செல்வம் பால் போல பொங்கும், தங்கத்தை எல்லாம் வீட்டை நோக்கி இழுத்துவரும் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
இது அப்பட்டமான மோசடி வேலை என்பதை அறிந்த போலீசார் அங்கு மோசடி வித்தையை அரங்கேற்ற மூளைச்சலவை செய்து கொண்டிருந்த கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்த உமாசங்கர், ராணிப்பேட்டையை சேர்ந்த சதீஷ், உள்ளிட்ட எட்டுபேர் கொண்ட இடைத்தரகர்கள் கும்பலை சுற்றி வளைத்தனர்.
அப்போது காவல்துறையினரிடம் இருந்து பண்ருட்டியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் மட்டும் தப்பி ஓடிய நிலையில் மற்ற ஏழு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போலி வலம்புரி சங்கு மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
உழைத்தால் மட்டுமே வீட்டிற்கு செல்வம் தேடிவரும் என்று சுட்டிக்காட்டிய போலீசார் இதனை உண்மை என நம்பி கோடிகளை கொட்டிக் கொடுக்கும் பேராசைக்காரர்கள் தான் இந்த மோசடிக் கும்பலின் இலக்கு என்றும், இது போன்ற மோசடி ஆசாமிகளை நம்பி மோசம் போக வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.