மதுரை நாகமலை புதுக்கோட்டையில், தம்பி மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து, வணிகரிடம் 10 லட்ச ரூபாய் பணத்தை மிரட்டி பிடுங்கிக் கொண்ட வழக்கில், தலைமறைவாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பண இரட்டிப்பு மோசடிக்கு ஆசைப்பட்டு வந்த நபரிடம் 10 லட்ச ரூபாயை அபகரித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், காக்கி உடை கருப்பு ஆடு சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கும் செய்தித் தொகுப்பு..
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர், அர்சத். இவர், பேக் தயாரிக்கும் கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்க கடந்த மாதம் 5 தேதி 10 லட்ச ரூபாய் பணத்துடன் மதுரை சென்றாகவும், மதுரை-தேனி சாலையில், வாகன தணிக்கை என்ற பெயரில் நாகமலைபுதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி, தனது தம்பி பாண்டியராஜன் மற்றும் கூட்டாளிகள்,பால்பாண்டி, உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோருடன் சேர்ந்து அச்சுறுத்தி, மிரட்டி பணத்தை பிடுங்கிக் கொண்டதாகவும் கடந்த மாதம் 27ம் தேதி புகார் அளித்திருந்தார்.
ஆனால், பாண்டியராஜன், பால்பாண்டி, உக்கிரபாண்டி, சீமைச்சாமி நான்குபேரும் பண இரட்டிப்பு மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களிடம் 10 லட்ச ரூபாய் கொடுப்பதற்காகவே அர்சத் பணத்தை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அர்சத்தை தந்திரமாக பணத்துடன் வரவழைத்து, வழியில் தனது இன்ஸ்பெக்டர் அக்கா மூலம் பணத்தை பறித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். எஸ்.பி. உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு பால்பாண்டி, உக்கிரபாண்டி, சீமைச்சாமி ஆகியோரை கைது செய்து, 2 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த வசந்தி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். "குற்றம் சுமத்தப்பட்ட காவல் ஆய்வாளரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை? இப்படி இருந்தால் காவல்துறை மீது எப்படி மக்களுக்கு நம்பிக்கை வரும்?" என ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது நீதிபதி கண்டிப்புடன் கூறியிருந்தார்.
அதன் பின்னர், காவல்துறை தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி, வசந்தியையும் அவரது தம்பி பாண்டியராஜனையும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வைத்து கைது நேற்று செய்தனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னர், மருத்துவ பரிசோதனைக்காக வசந்தியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
மருத்துவ பரிசோதனை முடிந்து செல்லும்போது, வசந்தியை செய்தியாளர்கள் படம்பிடிக்க விடாமல் தவிர்க்கும் நோக்கில், போலீசார் அவரை பின்வாசலை நோக்கி இழுத்துக்கொண்டு வேக வேகமாக ஓடினர். அப்போது போலீசாருக்கு மத்தியில் மறைந்தவாறு, தரையில் வசந்தி அமர்ந்து கொண்டார்.
வசந்தியின் வழக்கறிஞர்களும், அங்கிருந்த சில குண்டர்களும் செய்தியாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, படம் எடுக்க விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு ஒரு களேபரமான சூழல் உருவானது.
இதைத் தொடர்ந்து, வசந்தி மதுரை மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை செப்டம்பர் 9 -ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.