நெல்லை அருகே கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பிரிந்து சென்றதும் பெற்ற குழந்தைகளை விற்பனை செய்த பெண், அவருக்கு இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் என 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களால் விற்கப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்டுள்ளனர். 2வது குழந்தை கருவில் இருக்கும்போதே பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்த மைலாப்புரத்தைச் சேர்ந்த தேவி என்ற பெண்ணுக்கும் அவருடைய தோழிகளான வியாகம்மாள்மேரி, மார்க்கரேட் தீபா ஆகிய பெண்களுக்கும் இடையே பணம் பங்கு பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கிடையே நடந்த சண்டையை கவனித்த அக்கம்பக்கத்தினர், தேவிக்கு அண்மையில் பிறந்த குழந்தை தொடர்பாகத்தான் அந்த சண்டை நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு மாவட்ட குழந்தைகள் நல அமைப்புக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் 6 மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த தேவி, தனது 2 வயது மகள் தர்ஷனாவை ஜான்எட்வர்ட் - அற்புதம் என்ற தம்பதியிடம் 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
கணவர் பிரிந்து சென்றபோது 4 மாத கர்ப்பிணியாக இருந்த தேவிக்கு 25 நாட்களுக்கு முன் 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது. 2வது குழந்தை கருவில் இருந்தபோதே தென்காசியைச் சேர்ந்த அமலாபாத்திமா -ஞானமிக்கேல் என்ற தம்பதியிடம் அதனை விற்பதற்காக பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.
குழந்தை கருவுற்றது முதல் பிறப்பு வரையிலான செலவையும் குழந்தைக்கான விலையையும் அமலாபாத்திமா -ஞானமிக்கேல் தம்பதி கொடுத்துவிட வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த குழந்தைகள் விற்பனையில் வியாகம்மாள்மேரியும் மார்க்கரேட் தீபாவும் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். 2வது குழந்தையைப் பெற்றுக் கொண்ட அமலாபாத்திமா - ஞானமிக்கேல் தம்பதி பேசியபடி ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளனர் என்றும் அந்தப் பணத்தை பிரித்துக் கொள்வது தொடர்பாகத்தான் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து விற்பனை செய்யப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், இது தொடர்பாக போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்படி, குழந்தைகளின் தாய் தேவி, இடைத்தரகர்களான வியாகம்மாள்மேரி, மார்க்கரேட் தீபா, குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய 2 தம்பதிகள் என 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகவுள்ள அவர்களைத் தேடி வருகின்றனர்.
குழந்தைகளை விற்பது சட்டப்படி குற்றம் என்று கூறும் அதிகாரிகள், வறுமை காரணமாக குழந்தைகளை வளர்க்க முடியாதவர்கள், அதனை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் குழந்தைகளை தத்தெடுக்க விரும்புபவர்கள், அதற்கென இருக்கும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி முறையாகவே தத்தெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.