கையகப்படுத்தப்படும் கோவில் நிலத்திற்கு சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தடை விதிக்க கோரியும், நீதிமன்ற அவமதிப்பு நடந்துள்ளதாகவும் கூறி தாக்கலான மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், அதிகாரிகள் நிர்ணயிக்கும் இழப்பீடு தொகை கோவிலுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், நிலத்தை குத்தகைக்கு எடுப்பதாக இருந்தால் அவ்வப்போதைக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் குத்தகை தொகையை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.