கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே இறந்த கோழியை வறுத்து உண்பதில் ஏற்பட்ட தகராறில் கூட்டாளியை அடித்துக் கொன்ற செங்கல் சூளைத் தொழிலாளியும் அவரைக் காப்பாற்ற முயன்ற சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியதள்ளபாடி கிராமத்தில் இயங்கி வரும் வெங்கட்ராமன் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் தங்கி முருகன், மாரியப்பன் என்ற 2 முதியவர்கள் வேலை செய்து வந்துள்ளனர்.
கடந்த 24ஆம் தேதி மாரியப்பனின் உடல் ரத்தவெள்ளத்தில் அங்குள்ள மாந்தோப்பில் இருந்து மீட்கப்பட்டது. விசாரணையில், 23ம் தேதி செங்கல் சூளையில் வளர்க்கப்பட்ட கோழி ஒன்று உயிரிழந்துள்ளது. அந்தக் கோழியை வறுத்து உண்பதில் ஏற்பட்ட தகராறில், மாரியப்பனை முருகன் அடித்துக் கொன்றுள்ளார்.
விஷயம் உரிமையாளர் வெங்கட்ராமனுக்குத் தெரியவரவே, சூளைத் தொழில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என எண்ணி, உடலை அங்குள்ள மாந்தோப்பில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து முருகன், வெங்கட்ராமன், அவரது மகன் அஜித்குமார், சேகர் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்.