மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நாடு முழுவதும் ஒரேபோல 27 விழுக்காடு இடஒதுக்கீடு அனுமதிக்கத் தக்கது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
திமுக தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு ஏதும் செய்யவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டால், பிற பிற்படுத்தப்பட்டோருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த வழக்கில், தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நாடு முழுவதும் ஒரேபோல இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விகிதத்தில் இடஒதுக்கீடு பின்பற்ற முடியாது எனவும் தீர்ப்பளித்தது.
முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது, மொத்த இடஒதுக்கீட்டு அளவான 50 விழுக்காட்டுக்கு அதிகமாக உள்ளதால், உச்ச நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் அனுமதிக்கத் தக்கதல்ல எனத் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு ஆகாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.