2 மணி நேரம் பெய்த மழைக்கே சென்னை தத்தளித்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதைத் தொடர்ந்து, 2015ல் சென்னையில் வெள்ளம் ஏற்பட காரணம் என்ன? என பேரவையில் விவாதம் ஏற்பட்டது.
அதிமுக ஆட்சியின் போது கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததே காரணம் என திமுக உறுப்பினர் நந்தகுமார் கூறியபோது, செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்லாது அதற்கு கீழ் இருந்த ஏரிகளும் நிரம்பியதுதான் காரணம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் 4 நாட்களாக அப்போதைய முதலமைச்சர் உத்தரவுக்கு காத்திருந்ததாகவும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நாளில் அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டதாகவும் காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.
இதை மறுத்த எடப்பாடி பழனிசாமி, அணைகளோ ஏரிகளோ நிரம்பும் போது அதிகாரிகளே திறந்து விடுவது நடைமுறைதான் என்றும், பாசனத்திற்காக நீர் திறக்கும் பொழுது மட்டும் தான் முதலமைச்சரின் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறினார்.