தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்குடன், கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. சுமார் 4 மாதங்களுக்குப் பின் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன.
தமிழக அரசு அறிவித்த கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இன்று திறக்கப்படுகின்றன. ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்கு பின் திறக்கப்படுவதையொட்டி, பல திரையரங்குகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்படுகின்றன. இதுவரை இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்ட அனைத்துக் கடைகளும் இன்று முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்குப் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. நீச்சல் குளங்கள் விளையாட்டுப் பயிற்சிகளுக்காக மட்டும் 50 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மது பார்கள் இன்று முதல் செயல்படுகின்றன.