தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரையிலுள்ள கீழணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரி மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 45ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கும் வீராணம் ஏரியில் இருந்து தினந்தோறும் குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
இந்த நிலையில், 47.50 அடி மொத்த உயரம் கொண்ட வீராணம் ஏரி நீர்மட்டம் தற்போது 46.46 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,844 கன அடி வீதமாக உள்ள நிலையில், இன்னும் 2 நாட்களில் ஏரி முழு கொள்ளளவை எட்டும் என கூறப்படுகிறது.