ஊரடங்கு நீட்டிப்பு, கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், அதுதொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. இதனிடையே, செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கி, 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை காலை 6 மணியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, பள்ளிக்கல்வித் துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர்.
கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, கொரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, தியேட்டர்கள் திறப்பு, சுற்றுலா தலங்களுக்கு முழுமையான அனுமதி குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கி, 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.