கோவை மாவட்டம், ஒட்டர்பாளையம் விஏஓ அலுவலகத்தில், கிராம நிர்வாக உதவியாளர் முத்துச்சாமி, விவசாயி கோபால்சாமியை தாக்கிய விவகாரத்தில், வீடியோ எடுத்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் கோபால்சாமியின் காலில் உதவியாளர் முத்துசாமி விழுகின்ற வீடியோ 7ஆம் தேதியும், கிராம நிர்வாக உதவியாளர் முத்துச்சாமி, விவசாயி கோபால்சாமியை தாக்கிய வீடியோ தாமதமாக 14ஆம் தேதி வெளியானது. இதன் மூலம் இரு சமூகத்தவரிடையே மோதலை உருவாக்கி, அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியதாக, வீடியோ எடுத்த நபர் மீது அன்னூர் வடக்கு வருவாய் ஆய்வாளர் பெனாசிர் பேகம் புகார் அளித்துள்ளார்.
இதன் பேரில் அன்னூர் காவல் நிலையத்தில், இரு பிரிவினரிடையே பகைமையை தூண்டிய பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீடியோ எடுத்தவரை அடையாளம் தெரியாத நபர் என குறிப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.